Sunday, February 17, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 1021




பால் - பொருட்பால்
இயல் - குடியியல்
அதிகாரம் - 103 - குடி செயல் வகை.
குறள் - 1021

கருமம் செயஒருவன் கைதூவேன் என்னும்
பெருமையின் பீடுடையது இல்.

விளக்கம் - பிறந்த குடிப் பெருமையை உயர்த்த தான் மேற்கொண்ட செயலில் சோர்வடைய மாட்டேன் என்னும் பெருமையைக் காட்டிலும் பெருமை மிக்கது வேறு எதுவும் இல்லை.

ஒவ்வொருவரும் தத்தம் பொறுப்பைப் பொதுவாக உணர்ந்து கடமையைச் செய்தால்தான், எல்லாருக்கும் எல்லாம் கிடைக்கக் கூடிய நிலைமை வரும். உலகம் முழுதும் ஒரு குடும்பமாக நெருங்கிச் சுருங்கி வருவதையும் உணர வேண்டும்.

என் கடமையாகிய தொழிலைச் செய்வதற்கு நான் தளர மாட்டேன் என்னும் முயற்சிப் பெருமையைப் போல் சிறப்புடையது வேறு இல்லை.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 


ஒருபுடை பாம்பு கொளினும் ஒருபுடை
அங்கண்மா ஞாலம் விளக்குறூம் திங்கள்போல்
செல்லாமை செல்வன் நேர்நிற்பினும் ஒப்புரவிற்கு
ஒல்கார் குடிப்பிறந் தார்.

_ நாலடியார் -சமண முனிவர்கள்.

தனது ஒரு பாகம் பாம்பினால் பிடிக்கப்பட்டிருந்தாலும், மற்றொரு பாகத்தால் அழகிய இடத்தையுடைய பெரிய பூமியை விளக்கும் பூரண சந்திரன் போல, உயர்குடியில் பிறந்தவர்கள் வறுமை நன்றாகத் தம்மிடம் நேர்ந்து நின்றாலும், பிறருக்கு உபகாரம் செய்வதற்குத் தளர மாட்டார்கள்.

கடித்துக் கரும்பினைக் கண்தகர நூறி
இடித்துநீர் கொள்ளினும் இன்சுவைத்தே யாகும்
வடுப்பட வைதிறந்தக் கண்ணும் குடிப்பிறந்தார்
கூறார்தம் வாயின் சிதைந்து.
_ நாலடியார்.

கரும்பை வாயால் கடித்தும், கணுக்கள் நொறுங்கும்படி ஆலையில் இட்டுச் சிதைத்தும், உலக்கை,கல் முதலியவற்றால் நொறுக்கியும் இரசத்தைக் கொண்டாலும் அக் கருப்பஞ்சாறு இனிய சுவையே உடையதே. அது போல உயர்குடியில் பிறந்தவர்கள் நல்ல நிலைமை கெட்டு தங்கள் வாயினால் தீயவற்றைச் சொல்ல மாட்டார்கள்.

குடிப் பெருமை உயர்வதற்குரிய காரியத்தைச் செய்வார்களேயன்றி சிதையக் கூடியவற்றைச் செய்ய மாட்டார்கள்.

சால்பினில் தோன்றும் குடிமையும்
- திரிகடுகம்-நல்லாதனார்.

நற்குணச் செய்கைகளின் நிறைவில் உயர் குடிப் பிறப்பின் பெருமை விளங்கும்.

குணத்தினால் குலநலந் தெரியலாம்.
-அறப்பளீசுர சதகம் _ அம்பலவாணக் கவிராயர்

ஒருவரது குண நலன்களால் அவரது குடிப் பெருமையை அறியலாம்.

கோடி கொடுத்தும் குடிபிறந்தார் தம்மோடு
கூடுவதே கோடி யுறும்.
- ஒளவையார்,

கோடி பொருளைக் கொடுத்தாகிலும் குடிப் பெருமை காக்கும் உயர்குடியில் பிறந்தவரோடு கூடியிருப்பதே கோடி பெறும்.

உரைமுடிவு காணான் இளமையோன் என்ற
நரைமுது மக்கள் உவப்ப _ நரை முடித்துச்
சொல்லால் முறைசெய்தான் சோழன் - குலவிச்சை கல்லாமல் பாகம் படும்.
- பழமொழி நானூறு - முன்றுறை அரையனார்.

கரிகாற் பெருவளத்தானிடம் இரு முதியவர்கள் ஒரு வழக்கை எடுத்து வந்தனர். அவனுடைய இளமையைக் கண்டதும், 'இவன் இளமைப் பருவத்தான் வழக்கிற்கு முடிவு சொல்ல அறியான் என்று கருதினர். அதனை அறிந்த கரிகாலன் முதியவனாகத் தன்னை ஒப்பனை செய்து கொண்டு வந்து, வந்த முதியவர்கள் மனம் மகிழுமாறு வழக்கினைக் கேட்டு நியாயம் வழங்கினான். இதனால் குலத்திற்கே உரிய அறிவுச் செழுமை இயல்பாக வந்து படியும் என்பது புலனாகிறது. சரியாக நீதி வழங்கி தன் குலப் பெருமை குன்றாமல் நீதி வழங்கினான் கரிகாற்சோழன்.

குடிப் பெருமை உயரப் பாடுபடுவதே சிறந்ததாகும். அதற்கு ஒரு போதும் தளரக்கூடாது. குடிப் பெருமையை உயர்த்துவதை விட மேன்மை தரக்கூடியது வேறு இல்லை.

பிறந்த குடி உயர்த்த
பெருஞ்செயல் செய்ய
மறவேன் மனந்தளரேன் _ என்ற
பெருமை பீடு தரும்!


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...