Tuesday, August 28, 2018

இன்பம் இன்பம்




செந்நெல் மணிகள் சிட்டுக் கின்பம்

மட்டவிழ்மலர்கள் வண்டுக் கின்பம்

புலவரின் பாக்கள் புரவலர்க்கின்பம்

புரவலர்க்கொடையே இரவலர்க் கின்பம்.

ஒளவைக் கின்பம் அதியனின் நெல்லி

தெளவைக் கின்பம் தரித்திரம், வறுமை

கொவ்வைக்கனிகள் கிளி கட் கின்பம்

கொழுநனைச்சேறல் கோதையர்க் கின்பம்.

நெஞ்சுக் கின்பம் நினைவின் அலைகள்

கண்ணுக்கின்பம் கவினுறு கலைகள்

சிற்பிக்கின்பம் செதுக்கிய சிலைகள்

செவிகட்கின்பம் மதலையின் குதலை.

முகிலுக் கின்பம் மயூர நடனம்

முளரிக்கின்பம் இரவியின் வருகை

அழகொளி வீசும் அம்புலி காணின்

அமுத வாவியின் குமுதம் மலரும்.


நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்


கவி ஆண்ட கண்ணதாசன்-2



தொடர்ச்சி...

 வித்தாரக்கவி நெஞ்சில் முத்தாரமான தமிழில் முக்காலத்திலும் அழியா சத்தான கவி படைத்த கண்ணதாசனை பாராட்டவே ஒரு பெரும் தகுதி வேண்டும் என்ற எண்ணம் வந்துவிட்டது எனக்கு.
காரணம் கண்ணதாசனை பாராட்டியுள்ளார் ஒரு பெரியவர் அவர் யார் தெரியுமா?

கடல் கடந்து, கண்டங்கள் கடந்து தன் நாவன்மையால் சைவத்தையும், தமிழையும் பரப்பிய ஆன்மீகக்கடல் திருமுருக கிருபானந்த வாரியார் கண்ணதாசனை தன் கவிதையால் வாழ்த்துகிறார்.
அதனை ஒரு நேரிசை வெண்பாவாக வடிக்கிறார்.

எத்திக்கும் தித்திக்கும் இன்பக் கவிதைகளை 
சித்திக்கும் வித்தாகச் செப்புகின்றான் - சத்திக்கும்
கண்ணதா சக்கவிஞன் கந்தன் கருணையினால் 
வண்ணமுடன் வாழி மகிழ்ந்து.


குறள்வழிச் சிந்தனைகள் - 1222


பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 123 - பொழுது கண்டு இரங்கல்
குறள் - 1222

புன்கண்ணை வாழி மருள் மாலை எம்கேள்போல்
வன்கண்ண தோநின் துணை.

விளக்கம் - மயங்கிய மாலைப் பொழுதே நீ வாழ்வாயாக. நீயும் என்னைப் போல் துன்பப்படுகின்றாயே. உன் துணையும் என் தலைவனைப் போல் இரக்கம் அற்றதோ?
மாலைப் பொழுதே நீ ஏன் இப்படி கொடுமை செய்கிறாய்?

காதலி மாலைப் பொழுதைக் கண்டு வருந்துகிறாள். அதுவும் தன்னைப்போல் துணையின்றி மயங்கித் துன்புறுவதாக எண்ணுகின்றாள். அதனால் தான் மாலைப் பொழுதே நீயும் என்னைப் போல் துன்புறுகின்றாயோ? என் துணையைப் போல் உன் துணையும் இரக்கம் அற்ற தோ என்று கேட்கின்றாள்.

குறள்வழிச் சிந்தனைகள் - 1254
















பால் - இன்பத்துப்பால்
இயல் - கற்பியல்
அதிகாரம் - 126நிறையழிதல்
குறள் - 1254

நிறையுடையேன் என்பேன்மன் யானோஎன் காமம்
மறையிறந்து மன்று படும்.

விளக்கம் :- நான் இதுவரை நிறையுடையேன் என என்னை நான் நினைத்திருந்தேன். ஆனால் காமம் என்னுள் மறைந்து இருத்தலைக் கடந்து மன்றத்தில் வெளிப்படுகின்றது.

நம்மை வெறுத்தவர்களை நாமும் வெறுக்க வேண்டும். நம்மைப் புறக்கணித்தவர்களை நாமும் புறக்கணிக்க வேண்டும் என்று உலகம் சொல்கின்றது. ஆனால் புறக்கணித்தவர்களையே மீண்டும் மீண்டும் நாடும் மனத்தால் அன்பு வளரும். மானம் இழந்தாலும் அன்பு வளரும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.
அன்பு வளர்ந்த நெஞ்சிற்கு மானம் என ஒன்று இல்லை, வெறுப்பு என்பது கிடையாது, வெறுப்பாக நெருங்கினாலும் விரும்புவதாகவே முடியும் என்று காதல் வாழ்க்கை கற்பிக்கின்றது.

காதல் வாழ்க்கையில் வெறுப்பும் துறவும் கொள்ள முடியாது. தம்மை நீங்கியவரை வெறுத்து ஒதுக்குவது காதல் துன்பம் உற்றவர்களுக்குத் தெரியாது. எவ்வளவு தான் நிறையுடன் மறைத்து வைத்தாலும் மன்றம் அறிய வெளிப்பட்டு விடும்.

கவி ஆண்ட கண்ணதாசன்-1

காலத்தை வென்று இன்றளவும் சிலாகித்து இரசிக்கப்படுகிறது கண்ணதாசன் அவர்களின் கவிதைகள்.

தனி வாழ்வில் எத்தனையோ ஏற்ற இறக்கங்களை சந்தித்த கண்ணதாசன் அவர்கள் கவலையோடு வாழாமல் கவிதையோடு வாழ்ந்தார் என்பது வெள்ளிடைமலை.

அவர் கவிதைகளைப்பற்றி சொல்லவேண்டுமென்றால் வைரமுத்து அவர்களின் வார்த்தைகள் தான் நினைவுக்கு வருகிறது.

"பொருக்கி எடுத்த உலக அழகுகளை நெருக்கித்தொடுத்த நேர்த்தியான சித்திரம்" என்று தான் கூறவேண்டும்.

காலக்கணிதம் என்ற தலைப்பில் கண்ணதாசன் அவர்கள் எழுதிய கவிதை இங்கு காணொளியாக கொடுக்கப்பட்டுள்ளது.




              




கவிஞன் யானோர் காலக் கணிதம்
கருப்படு பொருளை உருப்பட வைப்போன்!

புவியில் நானோர் புகழுடைத் தெய்வம்
பொன்னிலும் விலைமிகு பொருளென் செல்வம்!

இவைசரியென்றால் இயம்புவதென் தொழில்
இவைதவ றாயின் எதிர்ப்பதென் வேலை!

ஆக்கல் அளித்தல் அழித்தல்இம் மூன்றும்
அவனும் யானுமே அறிந்தவை; அறிக!

செல்வர்தங் கையில் சிறைப்பட மாட்டேன்;
பதவி வாளுக்கும் பயப்பட மாட்டேன்!

பாசம் மிகுத்தேன்; பற்றுதல் மிகுத்தேன்;
ஆசைதருவன அனைத்தும் பற்றுவேன்!

உண்டா யின்பிறர் உண்ணத் தருவேன்;
இல்லா யின்எம ரில்லந் தட்டுவேன்!

வண்டா யெழுந்து மலர்களில் அமர்வேன்
வாய்ப்புறந் தேனை ஊர்ப்புறந் தருவேன்!

பண்டோர் கம்பன், பாரதி, தாசன்
சொல்லா தனசில சொல்லிட முனைவேன்!

புகழ்ந்தால் என்னுடல் புல்லரிக்காது,
இகழ்ந்தால் என்மனம் இறந்துவிடாது!

வளமார் கவிகள் வாக்குமூ லங்கள்
இறந்த பின்னாலே எழுதுக தீர்ப்பு!

கல்லாய் மரமாய் காடுமே டாக
மாறா திருக்கயான் வனவிலங் கல்ல!

மாற்றம் எனது மானிடத் தத்துவம்;
மாறும் உலகின் மகத்துவம் அறிவேன்!

எவ்வெவை தீமை எவ்வெவை நன்மை
என்ப தறிந்து ஏகுமென் சாலை!

தலைவர் மாறுவர்; தர்பார் மாறும்;
தத்துவம் மட்டுமே அட்சயப் பாத்திரம்!

கொள்வோர் கொள்க; குரைப்போர் குரைக்க!
உள்வாய் வார்த்தை உடம்பு தொடாது;

நானே தொடக்கம்; நானே முடிவு;
நானுரைப் பதுதான் நாட்டின் சட்டம்!




மதுரை மீனாட்சியம்மன் மீது கவியரசர் எழுதிய அவிவேக சிந்தாமணி 
அவர்தம் மேதாவிலாசத்தை நிறுவுகிறது.




















திருடனும் அரகரா சிவசிவா,
என்றுதான் திருநீறு பூசுகிறான்!
சீட்டாடும் மனிதனும் தெய்வத்தின்
பேர்சொல்லி  சீட்டை புரட்டுகிறான்;
முரடனும் அரிவாளில் காரியம்
பார்த்தபின் முதல்வனை கூவுகிறான்,
முச்சந்தி மங்கையும் முக்காடு
நீக்கையில் முருகனை வேண்டுகிறாள்;
வருடுவாருக்கு எல்லாம் வளைகின்ற தெய்வம்
என் வாழ்க்கையைக் காக்கவில்லையே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டிடும்
மதுரை மீனாட்சி உமையே!


தான்பெற்ற பிள்ளையை ஏன் பெற்றோம்
என்றுதான் தாயன்று மாண்டு போனாள்!
தந்தையும் இப்பிள்ளை உருபடாது என்றுதான்'
தணலிலே வெந்து போனான்!
ஊன்பெற்று யானுமோர் உயிர்கொள்ள வைத்தவன்,
உயரத்தில்  ஒளிந்து கொண்டான்!
உதிரத்தின் அணுவிலே தமிழன்னை மட்டும்தான்
கருவாக வந்து நின்றாள்!
வார்கின்ற கவியன்றி வேறொன்றும் இல்லையே,
வைகையில் பூத்த மலரே!
மலர்கொண்ட கூந்தலை தென்றல் தாலாட்டும் 
மதுரை மீனாட்சி உமையே!

தொடரும்....

நன்றிகளுடன் இல்மீ









சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...