Thursday, March 7, 2019

குறள்வழிச் சிந்தனைகள் - 199














பால் - அறத்துப்பால்
இயல் - இல்லறவியல்
அதிகாரம் - 20- பயனில சொல்லாமை.
குறள் - 199.

பொருள்தீர்ந்த பொச்சாந்துஞ் சொல்லார் மருள்தீர்ந்த
மாசறு காட்சி யவர்.


விளக்கம் - மயக்கம் நீங்கிய தெளிந்த அறிவினையுடையார் பயனில்லாத சொற்களை மறந்தும் சொல்லமாட்டார்கள்.

வாய்ச்சொற்கள் நெஞ்ச நிலையைக் காட்டவல்லவை. அற நினைவு இருந்தால் பயனற்ற எண்ணங்கள் தோன்றாது. அந்த எண்ணங்களின் விளைவான பயனிலாச் சொற்களைப் பேசுதலும் இயலாது.

பயனற்ற சொற்களைப் பேசித்திரிபவன் கள்ளுண்பவனைப் போலவும், சூதாடுபவனைப் போலவும் காலத்தையும், தன் ஆற்றலையும் வீணாக்கிக் கடமையை மறக்கின்றான். ஏதோ ஒன்றை உளறி அவன் அடையும் இன்பம் பொய்யானது. தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளும் போலியான இன்பம். வாய் புளித்ததோ, மாங்காய் புளித்ததோ என்று கண்டபடி பயனற்ற சொற்களைப் பேசித் திரிவது அவன் மீதுள்ள மதிப்பு, மரியாதையையும் வீணாக்கி விடும்.

சும்மா இருப்பதே சுகம்.

சொல்லாத சொல்லுக்கு விலையேதும் இல்லை.

பேசிய வார்த்தைகள் உனக்கு எசமான்.
பேசாத வார்த்தைக்கு நீ எசமான்

- என்பது போன்ற வழக்குகள் நடைமுறையில் உண்டு.

பயனற்ற சொற்களைப் பேசுபவன் விரைவில் மரியாதை இழப்பான்.
தெளிந்த அறிவினையுடையவரோ ஆராய்ந்து, அளந்து பேசுவர். ஒருபோதும் பொருளற்ற பயனற்றச் சொற்களை பேசமாட்டார்கள்.

பயனிலாச் சொற்கள் பேசுவது பண்படாத மனத்தின் குறையாகும்.
பக்குவப்பட்டவர்கள் பார்த்துப் பதமாகப் பேசுவர்.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம் 

நொய்ய வுரையேல்.
- ஆத்திசூடி - ஒளவையார்.

பயனற்ற அற்பவார்த்தைகளைப் பேசாதே.

வார்த்தை சொல்வார் வாய்பார்த்துத் திரியவேண்டாம்.
உலகநீதி - உலகநாதர்.

பயனற்ற சொற்கள் பேசுவாருடைய வாயைப் பார்த்துக் கொண்டு அவர் பின் அலைய வேண்டாம்.

பொய்குறளை வன்சொல் பயனிலவென் றிந்நான்கும்
எய்தாமை....

நலமன்றே நல்லாறு எனல்.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

பொய்யும் , புறங்கூறுதலும், கடுஞ் சொல்லும், பயனில சொல்லுதலும் ஆகிய நான்கு குற்றங்களும் வராமல் ஐம்புலன்களை அடக்கிக் காப்பதே நன்னெறியாகும்.

மையோ தடங்கண் மயிலன்னாய் சாயலே 
மெய்யே யுணர்ந்தார் மிகவுரைப்பர் - பொய்யே
குறளை கடுஞ்சொல் பயனில சொல்நான்கும்
மறலையின் வாயினவா மற்று.

- ஏலாதி - கணிமேதையார்.

மைதீட்டப்பெற்ற அழகான பெரிய கண்களை உடைய மயிலைப் போன்ற பெண்ணே! தெளிந்த அறிவினையுடைய பெரியோர்கள் எப்போதும் நல்ல சொற்களையும், உண்மையையுமே பேசுவார்கள். பொய், புறங்கூறல், கடுஞ்சொல் , பயனற்ற சொற்கள் இவையெல்லாம் புல்லறிவுடைய மூடர்களின் வாயிலிருந்து வெளிவருபவையாகும்.

நூற்கேலா
வெண்மொழி வேண்டினுஞ் சொல்லாமை

- திரிகடுகம்-நல்லாதனார்.

நூல்களுக்குத் தகாத பயனற்ற சொற்களை பிறர் விரும்பினாலும் சொல்லாது ஒழிதல் கற்றறிந்தாரின் கடமையாகும்.

போதிக்கத் தெரிந்தவன் சாதிக்க மாட்டான்
சாதிக்கத் தெரிந்தவன் போதிக்க மாட்டான்.

தெளிந்த அறிவுடைய சான்றோர்கள் மறந்தும் பொருளற்ற, பயனற்ற பேச்சுகளைப் பேசித்திரியமாட்டார்கள்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...