Wednesday, September 5, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 381














பால் - பொருட்பால்
இயல் - அரசியல்
அதிகாரம் - 39 - இறைமாட்சி
குறள் - 381

படைகுடி கூழ்அமைச்சு நட்பரண் ஆறும்
உடையான் அரசருள் ஏறு.

விளக்கம் :- . படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்னும் ஆறு அங்கங்களையும் உடையவனே அரசருள் ஆண் சிங்கம் போன்றவன் ஆவான்.

இக் குறட்பாவில் உள்ளவாறு அரசாங்கம் ( அரசின் அங்கம் ) என்பதன் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு. அரண் என்னும் ஆறு அங்கங்களையும், தனித்தனியே வகுத்து, இந்த ஆறனையும் உடைய ஆட்சித் தலைவனைப் பற்றி தனியே சில அதிகாரங்களில் கூறி ஏழு வகையாகப் பாகுபாடு செய்தல் திருக்குறளின் அமைப்பு முறைக்கு ஏற்றதாக உள்ளது.

அரசனது அதாவது ஆட்சித் தலைவனது இயல்பு கூறும் அரசியலையே மிக விரிவாக இருபத்தைந்து அதிகாரங்களில் கூறி முதலில் வைத்துள்ளார்.இப்பகுதியில் தான் ஆட்சித் தலைவனை இறை, வேந்து முதலான சொற்களால் நாற்பத்தாறு முறைச் சுட்டியுள்ளார்.

அரசியலில் இருபத்தைந்து அதிகாரங்களில் நாற்பத்தாறு முறை ஆட்சித் தலைவனை சுட்டிக் கூறும் நம் வள்ளுவப் பெருந்தகை மற்ற ஆறு இயல்களில் உள்ள நாற்பத்தைந்து அதிகாரங்களில் ஒன்பது முறையே சுட்டியுள்ளார்.

பழங்காலத்தில் முடியாட்சி இருந்தது. தற்காலத்தில் குடியாட்சி நடக்கிறது. எக்காலத்திற்கும் ஏற்புடையதாகவே அவரின் குறள் கருத்துகள் அமைந்துள்ளன.


இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்

அரசியல் ஐயைந்து அமைச்சியல் ஈரைந்து
உருவவல் லரணிரண்டொன்று ஒண்கூழ் _ இருவியல்
திண்படை நட்புப் பதினேழ் குடிபதின்மூன்று
எண்பொருள் ஏழாம் இவை.
- போக்கியார்.

இதன்படி பொருட்பால் ஏழு பகுதிகளை உடையது.
அரசியல் - 25
அமைச்சியல் - 10
அரண் - 2
கூழ் -1
படை - 2
நட்பு-17
குடி -13
ஆக எழுபது அதிகாரங்களை ஏழு பகுதிகளாகப் பிரிக்கலாம். 
இது மிகப் பொருந்துவதாகவே உள்ளது. பொருட்பாலின் முதல் குறளான இன்றைய குறளிலேயே இந்தப் பாகுபாட்டிற்கு அடிப்படையும் காணப்படுகிறது.


பத்திமை சான்ற படையும் பலர் தொகினும்
எத்துணையும் அஞ்சா எயிலரணும்- வைத்தமைந்த
எண்ணின் உலவா விழுநிதியும் இம்மூன்றும்
மண்ணாளும் வேந்தர்க் குறுப்பு.
- திரிகடுகம் - நல்லாதனார்.

தெளிவு - தன்மேல் அன்பு நிறைந்த சேனையும், பகைவர் பலர் கூடி எதிர்ப்பினும் பயப்பட வேண்டாத மதிலரணும் வைக்கப்பட்டு நிறைந்துள்ள அழியாத சிறப்பாகிய மிக்க செல்வமும் நன்கமையப் பெற்றுள்ள அரசனே சிறந்தவன் ஆவான்.

இகழின் இகழ்ந்தாங் கிறைமகன் ஒன்று
புகழினும் ஒக்கப் புகழ்ப - இகல்மன்னன்
சீர்வழிப் பட்டதே மன்பதைமற் றென்செயும்
நீர்வழிப் பட்ட புணை.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

நீர்வழிப்பட்ட தெப்பம் போல குடிமக்கள் அரசனது ஆணை வழியே நடப்பர்.
மன்னன் எவ்வழி மக்கள் அவ்வழி.

. சிறந்த சேனை.குடி, பொருள், மதிநலம் மிக்க அமைச்சர்கள், நட்பு. மதில் எனும் ஆறு அங்கங்களும் நன்கமையப் பெற்று நல்லாட்சி நடத்துபவனே ஆண் சிங்கம் போன்றவன்.

கோலொடு நிற்கும் தலைமைகள் இன்றி கொடுமையொடு நிற்கும் அமைச்சர்களும், அதிகாரிகளும் இன்று உள்ளனர்.
அவர்கள் வள்ளுவன் காட்டிய குறளொடு நின்றால் நாட்டில் நல்லாட்சி மலரும். நன்மையும் பெருகும்.

வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்

No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...