பால் - பொருட்பால்
இயல் - அங்க இயல்
அதிகாரம் - 76 - பொருள் செயல் வகை
குறள் - 751
பொருளல் லவரைப் பொருளாகச் செய்யும்
பொருளல்லது இல்லை பொருள்.
விளக்கம் :- ஒரு பொருட்டாக மதிக்கப்படாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருள்.
மக்கள் வாழ்க்கைக்குப் பொருள் இன்றியமையாதது. வாழ்வில் வரும் இடர்ப்பாடுகளைப் போக்கக் கூடிய ஆற்றல் பொருளுக்கே உண்டு.
அறிவை அற்றம் காக்கும் கருவி என்பர். துன்பத்தை நீக்குவதற்கு அறிவு மட்டும் போதாது. பொருளும் தேவை.ஒரு பொருளாக மதிக்கத்தகாதவரையும் பொருளாக மதிக்கச் செய்வது பொருளே. இம்மைக்கும் மறுமைக்கும் பயன் தருவது செல்வம்.
மதிக்கச் செய்யும் பொருளானது பிறருக்கும் பயன்பட வேண்டும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
நெடிய மொழிதலும் கடிய ஊர்தலும்
செல்வம் அன்று தன்செய்வினைப் பயனே
சான்றோர் செல்வம் என்பது சேர்ந்தோர்
புன்கண் அஞ்சும் பண்பின்
மென்கட் செல்வம் செல்வம் என்பதுவே.
- நற்றிணை - மிளைகிழான் நல்வேட்டனார் .
உண்மையான சிறந்த செல்வம் என்பது தன்னைச் சார்ந்து அடைக்கலமாக வந்தவரின் துன்பத்தை நீக்குவதே. வசதி வாய்ப்புகள் ஊழ்வினைப் பயனால் தொடர்பவை.செல்வம் நிலையற்ற தன்மையுடையது. அதனால் செல்வத்தின் தன்மை பிறருடைய துன்பத்தைத் தீர்ப்பதாக அமைய வேண்டும்.
பொருட்களால் இன்பத்தை அனுபவிப்பதும், பிறருக்கு கொடுக்க நினைப்பதும் பொருளில்லாதவரால் செய்ய முடியாதவை.
ஈதலும் துய்த்தலும் இல்லோர்க் கில்.
_ குறுந்தொகை - உகாய்க்குடி கிழார்.
பொருள் இல்லாத வறுமையாளன் இன்பத்தை விரும்ப முடியாது என்பதையும் கீழ் வரும் பாடலடியால் அறியலாம்.
இல்லோன் இன்பங் காமுற் றாஅங்கு.
- குறுந்தொகை -
செல்வத்துப் பயனே ஈதல் .
உழைத்துப் பெற்ற பொருளைப் பிறருக்கு கொடுத்து உதவும் போதுதான் இன்பம் இரட்டிப்பாகிறது.
முன்னோர் சேர்த்து வைத்த செல்வமாக இருப்பினும் எந்த முயற்சியுமின்றி அப்பொருளை அனுபவித்தல் சிறப்புடையதன்று.
உள்ளது சிதைப்போர் உளரெனப் படாஅர்
இல்லோர் வாழ்க்கை இரவினும் இளிவு.
- குறுந்தொகை -பாலை பாடிய பெருங்கடுங்கோ.
தன்னுடைய முயற்சியின்றிப் பிறர் பொருளில் வாழும் வாழ்க்கை இரத்தலை விட இழிவானது.
குந்தித் தின்றால் குன்றும் மாளும் - என்னும் பழமொழியும் இக்கருத்திற்கு அரண் செய்யும்.
உண்கடன் வழிமொழிந்த இரக்குங்கால் முகனும்
தாம் கொண்டது கொடுக்குங்கால் முகனும் வேறு ஆகுதல்
பண்டும்இவ் வுலகத்து இயற்கை.
- கலித்தொகை .
பெற்ற பொருளைக் குறித்த காலத்தில் திருப்பித் தருதலாம் பிறரிடம் அவரைப் பற்றிய நன்மதிப்பு உயரும் .ஆனால் உறவானாலும், நட்பானாலும் பொருள் காரணமாக வாய்மை தவறும் போது உறவில் விரிசல் ஏற்படுதல் தவிர்க்க இயலாது. பொருள் பெற்ற போது மகிழ்தலும், திரும்பக் கொடுக்கும் போது முக வேறுபாடு கொள்வதும் நன்மையாகாதென்கிறது கலித்தொகை .
பொருளே வாழ்க்கையை உறுதி செய்கிறது.ஒரு பொருட்டாக மதிக்கத் தகாதவரையும் மதிக்கச் செய்கிறது.
பணம் பத்தும் செய்யும்.
பணம் பாதாளம் வரை பாயும்
என்னும் முதுமொழிகள் இதனை நன்குணர்த்தும்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment