பால் - பொருட்பால்
இயல் - அமைச்சியல்
அதிகாரம் - 65 - சொல்வன்மை
குறள் - 643
கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய்க் கேளாரும்
வேட்ப மொழிவதாஞ் சொல்.
விளக்கம் :- தன் பேச்சைக் கேட்போரை தன்வயப்படுத்தும் சிறப்பினை உடையதாகித் தன் பேச்சைக் கேளாதவரையும் எப்போது கேட்போம் என்று விரும்புமாறு பேசுவதே சொல்வன்மையாகும்.
கல்வி என்பது கற்றவர் மட்டும் பயன் பெறுவதற்கன்று. மற்றவர்களுக்கும் பயன்பட வேண்டும்.
தாம் இன்புற்றதை உலகு இன்புறச் செய்ய வேண்டும். கற்கும் போது தெளிவாகக் கற்று உணர்ந்தால் அந்தத் தெளிவு நெஞ்சில் இருக்கும்.அது வேண்டிய போது அழகாக வெளிப்படும். உள்ளத்தின் தெளிவு பேச்சில் வெளிப்படும். தானறிந்ததை பிறர் மனங்கொள்ளுமாறு கேட்பவர்களை கவரக்கூடிய வகையில் சொல்ல வேண்டும். கேளாதவரும் கேட்க வேண்டும் என்று விரும்பக்கூடியதாகச் சொல்ல வேண்டும். அதுதான் சொல்வன்மையாகும்.
இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்
கல்விக்கழகு கசடற மொழிதல்.
_ நறுந்தொகை-அதிவீரராம பாண்டியர்.
கற்ற கல்விக்கு அழகு தான் கற்றவைகளை குற்றம் நீங்கச் சொல்லுதல் ஆகும்.
நிற்கக் கற்றல் சொற்றிறம் பாமை.
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.
நிலை பெறக் கற்றலாவது, தான் சொல்லும் சொற்கள் தப்பிப் போகாமையாம்.
மொழிவ தறமொழி.
- ஆத்திசூடி - ஒளவையார்.
சொல்லப்படும் பொருளை ஐயமின்றி திருத்தமுறச் சொல்லு.
சுளிக்கச் சொல்லேல்.
- ஆத்திசூடி.
கேட்பவர்களுக்கு வெறுப்பும், கோபமும் கொண்டு முகம் சுளிக்கும் படிப் பேசாதே.
வாக்கு நயத்தாலன்றிக் கற்றவரை மற்றவரை
ஆக்கைநயத் தாலறிய லாகாதே _ காக்கையொடு
நீலச் சிறுகுயிலை நீடிசையா லன்றியே
கோலத் தறிவருமோ கூறு.
- நீதிவெண்பா
காக்கையும் அதைப் போலவே கருமை நிறமுடைய குயிலையும் இனிமை மிக்க இசைக் குரலால் அல்லாமல் உருவத்தினால் அவற்றின் பெருமையை அறியக்கூடுமோ? அது போலவே சொல்வன்மை உடையவர்களின் பேச்சின் இனிமையாலன்றி உடல் அழகினால் அறிய முடியுமோ? முடியாது.
கண்ணுக்கினிய சபைக்கு மணி கற்றோனே.
- நீதி வெண்பா.
சொல்வன்மை மிகுந்த கற்றோனே அவைக்கு அழகு செய்யும் மணியாவான்.
அவையஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும் கல்லார்
அவையஞ்சா ஆகுலச் சொல்லும்....
பூத்தலின் பூவாமை நன்று.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர்
அவைக்கு அஞ்சி நடுங்கும் சொல்வன்மை இல்லாதவருடைய கல்வியறிவும், அவைக்கு அஞ்சாதவர்களின் ஆரவாரச் சொற்களும் உண்டாகாமல் இருத்தலே நன்று.
ஒலிவாங்கியை கையில் எடுத்து விட்டால் போதும். ஒரு சிலர் ஓயாது பேசிக் கேட்பவர்களை தர்மசங்கடத்துக்கு உள்ளாக்குவர். மணிக்கணக்காகப் பேசுவது சொல்வன்மையன்று .
சொல்ல வேண்டிய கருத்துகளை ஒழுங்குபடுத்தி, இனிமையாக கேட்பவர்களை அந்த இடத்தை விட்டு நகர முடியாமல் கவரக்கூடிய அளவில் தன் பேச்சினால் கட்டிப் போட வைப்பவர்களே சொல்வன்மை மிக்கவர்கள் ஆவர்.
வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.
- நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்
No comments:
Post a Comment