Wednesday, August 29, 2018

குறள்வழிச் சிந்தனைகள் - 882


















பால் - பொருட்பால்
இயல் - நட்பியல்
அதிகாரம் - 89. - உட்பகை
குறள் - 882

வாள்போல் பகைவரை அஞ்சற்க அஞ்சுக
கேள்போல் பகைவர் தொடர்பு.

விளக்கம் :- வாளைப் போன்று வெளிப்படையான பகைவரைக் கண்டு அஞ்ச வேண்டாம். உறவினர் போல் இருந்து கொண்டு உட்பகை கொள்வோர் நட்புக்கு அஞ்சுதல் வேண்டும்.

புறத்தே வெளிப்படையாகத் தோன்றும் பகையை விடக் கொடியது உள்ளத்தில் பகை கொண்டு மேலுக்கு உறவு கொள்ளும் பகையாகும். அதுவே உட்பகை.
உட்பகை உடையவர்களை உணராமல் நம்மவர் என்று நம்பிக் கொண்டு ஏமாந்திருப்பது அறியாமையே.உட்பகை நமக்குத் தீமையே தரும்.

வெளிப்படையான பகைவரிடம் இருந்து ஒதுங்கி நம்மை நாம் தற்காத்து கொள்ள முடியும். உறவு போல் நடித்து உள்ளன்பு இல்லாமல் பழகி உட்பகை கொண்டவர்கள் நம்மை துன்புறுத்தத்தான் விழைவர்.



இக்குறளின் கருத்தினையொத்த வேறு சில இலக்கியங்களின் பதிவுகளைப்பார்க்கலாம்  


நஞ்சுடனே யொருநாளும் பழக வேண்டாம்.

- உலகநீதி - உலகநாதர்.



பால் கொடுப்பவருக்கும் விடத்தைக் கொடுக்கக் கூடிய பாம்பைப் போன்றவருடன் சேர்ந்து பழக வேண்டாம்.


நஞ்சுடைமை தானறிந்து நாகங் கரந்துறையும்
அஞ்சாப் புறங்கிடக்கும் நீர்ப்பாம்பு -நெஞ்சிற்
கரவுடையார் தம்மைக் கரப்பர் கரவார்
கரவிலா நெஞ்சத் தவர்.
_ மூதுரை - ஒளவையார்.

மனத்தில் வஞ்சனை உடையவர்கள் விடப் பாம்பைப் போல தம்மைத் தாமே மறைத்துக் கொள்வர். வஞ்சனை இல்லாத மனத்தை உடையவர் நீர்ப் பாம்பு போல் வெளிப்பட்டொழுகுவார்.

வெள்ளைக்கில்லை கள்ளசிந்தை. 
- கொன்றை வேந்தன் - ஒளவையார்.

களங்கமற்ற மனமுடையவருக்கு வஞ்சக நினைப்பில்லை.

புறப்பகை கோடியின் மிக்குறினும் அஞ்சார்
அகப்பகை ஒன்றஞ்சிக் காப்ப - அனைத்துலகும்
சொல்லொன்றின் யாப்பார் பரிந்தோம்பிக் காப்பவே
பல்காலுங் காமப் பகை.
- நீதிநெறி விளக்கம் - குமரகுருபரர் .

உலகம் முழுமையும் தமது ஒரு வார்த்தையினால் வயப்படுத்தக்கூடிய முனிவர், பன்முறையும் காமமாகிய உட்பகையை மிகவும் வருந்திக் காப்பர். அதுபோல் அறிவுடையார் வெளிப்பகை கோடிக்கு மேல் அதிகமாக இருந்தாலும் அதற்காக அஞ்சமாட்டார். உட்பகை ஒன்றேயானாலும் அதனால் விளையும் துன்பம் அதிகமாகையால் அதற்கு அஞ்சுவர்.

புறநட் டகம்வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு வேறாதல் வேண்டும். 
- நீதிநெறி விளக்கம்.

வெளிக்கு உறவு காட்டி உள்ளே பகைமை கொள்வாரிடம் பழைமை காட்டல் தகாது.

உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவார்
உறவு கலவாமை வேண்டும்.
- திருவருட்பா -வள்ளலார்.

உள்ளொன்று மனதில் வைத்து, புறத்தே ஒன்று பேசுபவர்களின் நட்பை விலக்குதல் வேண்டும்.

பகைவர்களை விடக் கொடியவர்கள் , நம் கூட இருந்தே குழி பறிக்கும் உட்பகையாளர்கள். அத்தகு துரோகிகளால் தான் நமக்கு ஆபத்துகள் அதிகம் விளையும்.

பக்கத்தில் இருப்பவன் பகையாளி – அவன்
பதமாய்ப் பிளந்திடும் கோடாலி
துக்கத்தில் நாம் துயர் பட்டாலே-அவன்
உள்ளுக்குள் நகைத்திடும் உளவாளி .

அல்லவர் நட்பை விலக்கி
நல்லவர் நட்பைப் பெறுவோம்.


வள்ளுவத்தைப் போற்றுவோம்.
வள்ளுவமாய் வாழ்வோம்.

நன்றிகளுடன் திருமதி. அமுதமணி கல்யாண சுந்தரம் அவர்கள்










No comments:

Post a Comment

சிப்பி தொடா நித்திலமே!

  சிப்பி தொடா நித்திலமே! சிற்ப உடல் அற்புதமே! பாவலரும் பாடவொண்ணா  காவனத்துப் பூவணமே! ஓவியனும் கீறவொண்ணா  ஒய்யார மானினமே!   தேன் பொதிந்தச்சொல...